மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை


மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஒவ்வொரு பிரிவிற்கும் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த பெருமாள் (வயது 50), முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்த கோபால் (60) ஆகியோர் மூட்டு வலியாலும், நடக்க முடியாமலும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களை பரிசோதனை செய்து, சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது மூட்டு முழுவதும் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். பின்னர் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் பெற்று, அறுவை சிகிச்சை மூலம் முழங்கால் மூட்டுவை முழுவதுமாக மாற்றினர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

275 பிரசவங்கள்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த அறுவை சிகிச்சை எந்தவித செலவும் இன்றி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வலி மற்றும் ஆதரவு சிகிச்சை, முதியவர்களுக்கான சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படுகின்றது. மாதம் ஒன்றிற்கு 275 பிரசவங்கள் பார்க்கப்படுவதோடு பல்வேறு வசதிகள் கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகின்றது. ஆகவே இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story