பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி இடைநீக்கம் துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவு
பெங்களூருவில், பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு
பெங்களூரு கிரிநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் சுதர்சன். இவர், பல் வலி காரணமாக கிரிநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில ஆண்டுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையை நடத்தி வரும் பெண் டாக்டருடன் போலீஸ்காரர் சுதர்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெண் டாக்டரிடம் இருந்து செல்போன் எண்ணை போலீஸ்காரர் சுதர்சன் வாங்கி வைத்து கொண்டார். மேலும் இரவு நேரங்களில் பெண் டாக்டரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி சுதர்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தொல்லை காரணமாக பெண் டாக்டர், தனது கிளினிக்கை மாற்றியுள்ளார். அத்துடன் ஞானபாரதியில் உள்ள பெண் டாக்டரின் வீட்டிற்கு போலீஸ்காரர் சுதர்சன் சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதன்காரணமாக அவர் தனது வீட்டையும் அங்கிருந்து மாற்றியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் சுதர்சன் மீது பெண் டாக்டர் புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் பெண் டாக்டரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பெண் டாக்டரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய போலீஸ்காரர் சுதர்சன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் மீண்டும் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் சுதர்சன் மீது பெண் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
இதையடுத்து, பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ்காரர் சுதர்சனை பணி இடைநீக்கம் செய்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் சுதர்சன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story