திருமணத்துக்கு பெண் பார்க்க அழைப்பதுபோல நடித்து நகை, செல்போன் பறிப்பு 3 பெண்களுக்கு வலைவீச்சு
சென்னை வடபழனியில், பெண் பார்க்க அழைப்பதுபோல் நடித்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நூதன முறையில் நகை, செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச்சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் காளிசரண் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தான் திருமணம் செய்துகொள்வதற்காக ‘மணமகள் தேவை’ என தனியார் திருமண தகவல் மையம் மூலம் ஆன்-லைனில் தனது ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை காளிசரணை செல்போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவர் “உங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆன்-லைனில் பார்த்து விட்டோம். நீங்கள் நேரில் வந்தால் பெண்ணை பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களை பேசி முடிவு செய்துவிடலாம்” என்றார்.
மேலும் சென்னை வடபழனியில் உள்ள தங்கள் வீட்டுக்கு உடனடியாக வருமாறும் காளிசரணுக்கு அந்த பெண் அழைப்பு விடுத்தார்.
அதனை உண்மை என்று நம்பிய காளிசரண், நேற்று முன்தினம் இரவு வடபழனி 100 அடி சாலை அருகே உள்ள பொன்னம்மாள் தெருவில் அந்த பெண் கூறிய முகவரிக்கு நேரில் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், காளிசரணை அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் உறவினர்கள் தங்கி இருப்பதாக கூறி அங்கு அழைத்து சென்றார்.
விடுதியில் உள்ள அறையில் மேலும் 2 பெண்கள் இருந்தனர். அவர்கள், “நாங்கள் போலீஸ். உன்னை சோதனை செய்யவேண்டும். உன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது” என்று கூறியதுடன், காளிசரணிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 5 பவுன் நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக்கொண்டதுடன், அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளிசரண், இது குறித்து வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
பின்னர் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் ‘மணமகள் தேவை’ என ஆன்-லைனில் காளிசரண் பதிவு செய்து இருப்பதை கண்டு அவரை பெண் பார்க்க அழைப்பதுபோல் நடித்து நூதன முறையில் நகைகள், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச்சென்று இருப்பது தெரிந்தது. இதற்காக அந்த கும்பல் விடுதி அறையை ஒருநாள் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தலைமறைவான 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story