கடலூர் அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் ஒருவர் அனுமதி
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் ஏராளமானவர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனால் மருத்துவமனைகளில் வழக்கத்துக்குமாறாக நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று காலையிலும் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றுச்சென்றனர்.
மேலும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் குணமடைந்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று வெங்கடாம்பேட்டையில் இருந்து ஒருவர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரையும் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 500 பேர் காய்ச்சலுக்காக உள்நோயாளிகளாக வார்டில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story