விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 25 Oct 2018 3:15 AM IST (Updated: 25 Oct 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 9 பரிவர்த்தனை கூடங்கள், 4 திறந்தவெளி கூடங்கள், 2 சிறிய திறந்தவெளி கூடங்கள், 2 ஊரக கிடங்குகள், 2 மெகா சேமிப்பு கிடங்குகள், ஒரு குளிர்சாதன கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.

கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், கம்பு, சோளம், எள், தினை, வரகு, சாமை, குதிரைவாலி, தேங்காய், மணிலா உள்ளிட்ட பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 14 ஆயிரம் மூட்டைகள் வரை பரிவர்த்தனை செய்யும் வசதிகள் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இருப்பினும், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தான் விளை பொருட்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேசிய வேளாண்மை சந்தை மூலம் வெளிமாநில வியாபாரிகளும், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்றுகொள்ள முடியும். இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை நவீனப்படுத்தும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இதில் முதற்கட்டமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், விளைபொருட்கள் உள்ள மூட்டைகள், சாக்குகள் திருடு போவதை தடுக்கவும், எளிதாக மேற்பார்வை பணிகளை மேற்கொள்ளும் வகையில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வயர்லெஸ் முறையிலான 5 கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னோடி விவசாயி தனவேல் கூறுகையில், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பொருத்தப்படும் கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும். அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலேயே ஒரு வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். 

Next Story