18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு தாமதமாக வந்துள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு தாமதமாக வந்துள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2018 11:15 PM GMT (Updated: 25 Oct 2018 2:50 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு கால தாமதமாக வந்துள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

மார்த்தாண்டத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பில் ஆச்சரியப்பட வேண்டியது எதுவும் இல்லை. இந்த தீர்ப்பு காலதாமதமாக வந்துள்ளது. முன்கூட்டியே தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுதான் ஆக வேண்டும்.  குற்றாலத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியது, புஷ்கர விழாவில் கலந்து கொண்டு பாவங்கள் போக்கும் நம்பிக்கையில் தான் தங்க வைத்தனர்.

சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்ணுக்கு கேரள போலீசார் தங்களது சீருடையை எப்படி வழங்கினார்கள்?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

சபரிமலையை பொறுத்த மட்டில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பழைய நிலை தொடரவேண்டும் என பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டம் மேம்பாலம் வருகிற 10–ந் தேதி மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். தற்போது பாலத்தின் கீழ் பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் மேம்பால பணிகள் முழுவதும் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story