கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றினால் போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றினால் போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 4:51 PM GMT)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

கருங்கல்,

குமரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரே விரைவு ரெயில் ‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்’. இந்த ரெயிலை குமரி மாவட்ட மக்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்டது ஆகும். இதில் தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த தடத்தில் மேலும் ஒரு ரெயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றி கேரளா மாநிலம் கொச்சுவேளி வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக உள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் ‘அனந்தபுரி எக்ஸ்பிரஸ்’ கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரெயில் தற்போது சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி என்ற காரணத்தை கூறி ‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்’ ரெயிலின் பெயரை மாற்றி கொச்சுவேளி வரை நீட்டிக்கும் முடிவுக்கு குமரி மேற்கு  மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் தென் மாவட்ட பயணிகள் இட ஒதுக்கீட்டிலும், குறித்த நேரத்திற்கும் சென்னைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்த முடிவை ரெயில்வே துறையும், மத்திய அரசும் உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

இல்லையென்றால் குமரி மாவட்ட ரெயில் பயணிகள் மற்றும் பொது மக்களை திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், அதிகாரிகள் இந்த முடிவை திரும்ப பெறும் வரை ரெயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Next Story