முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சி: கேரள அரசுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு
முல்லைப்பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை முறியடிக்க, தமிழக அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, சீர்மரபினர் நலச்சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பேசினர். அவர்கள் பேசும் போது கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையின் உரிமைகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 70 சதவீதம் இழந்து விட்டோம். மூத்த பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களின் நடவடிக்கையின்மையால் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. அணைக்கு மின் இணைப்பு பெற முடியவில்லை. பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்கவில்லை. பேபி அணையை பலப்படுத்தினால் தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 152 அடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியும். அதுமட்டுமின்றி அணைக்கு செல்லும் வல்லக்கடவு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு சூழ்ச்சி செய்து வருகிறது. தமிழக அரசின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெறாமல் புதிய அணை கட்டும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதையும் மீறி கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்து வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 42 கடிதங்களை கேரள அரசு எழுதி உள்ளது. இதில் 42-வது கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை ஏற்றுக் கொண்டு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை அவமதிப்பது ஆகும்.
எனவே, கேரள அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் வெகுண்டெழுந்து தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்துவதற்கு முன்பாக கேரள அரசின் சூழ்ச்சியை முறியடித்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
புதிய அணை கட்டும் முயற்சியை முறியடிக்க கேரள அரசுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். சட்டரீதியாக தமிழக அரசு அணுகி, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் பலத்த மழை பெய்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்த போது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தான் ஆபத்து ஏற்பட்டது என்று தவறான தகவல்களை தெரிவித்து நீர்மட்டத்தை குறைக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நிபுணர்கள் குழு பரிந்துரையின் படி ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீர்மட்டத்தை 139.99 அடியாக குறைக்க உத்தரவிட்டது. அதன்பிறகு நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், தற்போது 142 அடியாக உயர்த்தவும் கேரள அரசு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உள்ளது.
தற்போது வைகை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மாவட்டத்திலும் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விட்டன. அவ்வப்போது மழையும் பெய்து கொண்டு இருக்கிறது. எனவே, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தி, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.
அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் எடுப்பதற்கு கூடுதல் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் தங்கி இருக்க வேண்டும். கேரள போலீசாரை அணை பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேற்றி தமிழக போலீசார் அல்லது மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பதில் அளிக்கையில், ‘முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுடன் பக்கபலமாய் இருக்கும். விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். விரிவான கடிதமும் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-
சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ரசாயன உரம் பயன்படுத்தி மண்ணின் வளம் பறிபோய், மலடாகி உள்ளது. வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களின் ரசாயன உரங்களையே பயிர்களுக்கு பரிந்துரை செய்கின்றனர். இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை உரங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். இதற்கு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கண்மாய்கள், ஓடைகள், ஆற்றுப் பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. டி.சிந்தலைச்சேரியில் உள்ள புன்னை புதுக்குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், 12 கிராமங்களுக்கான நீராதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுப் பகுதிகளில் உள்ள 8 கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை. கெங்குவார்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் தனிநபர் ஒருவர் மண்ணை கொட்டி அடைத்துள்ளார். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.
தேவாரம் 13-வது வார்டு காந்திநகரில் உள்ள அங்கன்வாடி மையம் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. எனவே, காந்திநகரிலேயே அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு கலெக்டர் பதில் அளிக்கையில், ‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும். பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
கூட்டத்தில் மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story