திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

திருச்செந்தூர், 
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதனை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் நேற்று மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி, 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற 13-ந்தேதி நடைபெறும் சூரசம்ஹார விழாவில் 10 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கும் வகையில், கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

கூடுதலாக 300 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேம்படுத்தப்படும். போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, கோவில் இணை ஆணையர் பாரதி, தாசில்தார் தில்லைப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் சுந்தர ராகவன், கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி, கிராம நிர்வாக அலுவலர் மூக்காண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story