திருப்பூரில் 2 இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 101 பேர் கைது


திருப்பூரில் 2 இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 101 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள 2 இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 101 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாக பல்வேறு கட்சியினர், அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் நேற்று மாலை அங்கு, திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், மாவட்ட தலைவர் ஆறுமுகம், ம.தி.மு.க. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் துரைவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அபுதாஹிர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் அங்கு கூடினார்கள். அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு எதிராகவும், அவர் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் வக்கீல்கள் அமைப்பு சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.எ.க.ச.வின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் குமார், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் நந்தகோபால், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Next Story