திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகர அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க.மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜர், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், த.மா.கா. சார்பில் செழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எத்தகைய சீராய்வும் நடத்தாமல் திடீரென்று ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு பலமடங்கு வரியை உயர்த்தியுள்ளது. இந்த அநியாயமான, ஜனநாயக விரோத நடவடிக்கையை அனைத்துக்கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, உயர்த்தப்பட்ட சொத்துவரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வரி உயர்த்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

கட்டிட அங்கீகாரத்துக்காக வசூலிக்கப்படும் வரன்முறை கட்டணத்தொகை மிக, மிக அதிகமாக உள்ளது. அங்கீகாரமில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அபராதத்தொகை ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும் திட்டம் மிகவும் தவறானது. எனவே அவற்றை முறைப்படுத்த வேண்டும். அதுவரை எந்தவித தொகையும் வசூலிக்கக்கூடாது. அனைத்துக்கட்சிகளின் வேண்டுகோளையும் ஏற்று உரிய நடவடிக்கையை தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் இந்து அமைப்பு நிர்வாகிகள் பயிற்சியளித்துள்ளனர். மதசார்பற்ற அரசு கல்வி நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், அனுமதி அளித்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு இந்த மாத இறுதிக்குள் உரிய தீர்வு ஏற்படவில்லை என்றால் அனைத்துக்கட்சிகளின் சார்பில் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story