நெல்லை டவுன் போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை கதவை உடைத்து 1¾ கிலோ தங்கம் கொள்ளை 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லை டவுன் போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை கதவை உடைத்து 1¾ கிலோ தங்கம் கொள்ளை 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன் போலீஸ் நிலையம் அருகே நகைக் கடை கதவை உடைத்து ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1¾ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை 3 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை டவுன் மேலரதவீதி, வடக்கு ரதவீதி முழுவதும் நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் தான் அதிகம். இங்குள்ள பகுதிக்கு ஒருவர் நகை வாங்க சென்றால் கடையில் இருக்கும் ஊழியர்கள் இங்கு வாருங்கள், வாருங்கள் என்று போட்டிப்போட்டுக்கொண்டு அழைப்பார்கள். மேலும் அதன் அருகில் உள்ள கூலக்கடை பஜாரில் ஏராளமான நகைப்பட்டறைகளும் உள்ளன.

இந்த மேலரதவீதியில் நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு லட்சுமணனின் மகன் மணிகண்டன்(வயது 33) நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடையில் பல்வேறு புதிய மாடல் நகைகளும், தங்க சங்கிலிகள், நெக்லஸ், வளையல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நகைக்கடையின் அருகே நெல்லை டவுன் போலீஸ் நிலையம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவில் விற்பனையை முடித்துக்கொண்டு உரிமையாளர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் முன்பக்க ஷட்டர் கதவை உடைத்துள்ளனர். பின்னர் உள்கதவு மற்றும் கண்ணாடி கதவையும் உடைத்து கடைக்குள் சென்றனர். அங்கிருந்த சோக்கேஸ் கண்ணாடி மற்றும் இரும்பு பெட்டியை உடைத்து அதில் இருந்து தங்கச்சங்கிலிகள், நெக்லஸ், வளையல்கள், கைச்செயின், மோதிரங்களை கொள்ளையடித்தார்கள். மேலும், சோக்கேஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்த மற்ற பொருட்களை சிதறிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் நகைக்கடையின் கதவு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பதறியபடி வந்து கடைக்குள் சென்று பார்த்தபோது ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1¾ கிலோ எடை உள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஆங்காங்கே சின்ன மோதிரங்கள், கம்மல்கள் உள்ளிட்ட சிறிய பொருட்களும் சிதறிக்கிடந்தன.

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்தார். உடனே நெல்லை மாநகர துணைபோலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி போலீஸ் கமிஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளையர்கள் நகைகள் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி சோக்கேஸ்சை உடைத்தபோது ஒரு கொள்ளையனின் கையில் ரத்தகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடைந்த கண்ணாடி துண்டுகளில் ரத்தக்கறை இருந்தன. இதையும் போலீசார் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்திற்கு மோப்பநாய் ‘புளுட்டோ‘ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கடையின் முக்கிய இடங்களில் மோப்பம் பிடித்தது. பின்னர் ரத்தகறையை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து மேலரதவீதி சாலையில் தெற்கு நோக்கி ஓடி சந்தி பிள்ளையார்கோவில் பகுதியில் நின்றது. அதன்பிறகு சுடலைமாடன் கோவில் தெருவுக்கு சென்று திரும்பி வந்து வடக்கு ரதவீதியில் ஈசானவிநாயகர் கோவில் வரை சென்றுவிட்டு மீண்டும் கடைக்கு வந்தது.

மோப்பநாய் சென்ற இடங்களை வைத்தும், கொள்ளையனின் கைரேகை மற்றும் ரத்தக்கறையை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மேலரதவீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன்மூலம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை தொடர்பாக நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க மாநகர துணைபோலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைக்கடைகள் நிறைந்த பகுதியான மேலரதவீதியில், அதிலும் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் கொள்ளை நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடை உள்ள இடத்தின் அருகில் இருக்கும் சந்தி பிள்ளையார் கோவில் அருகிலும், லாசத்திரம் முக்கிலும் விடிய, விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் காவலாளிகள் உள்ளனர். அப்படி இருந்தும் இந்த கடையில் எப்படி கொள்ளை நடந்தது? மற்றும் கடையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தெளிவு இல்லாமல் இருப்பதும் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தனிப்படை போலீசார் பல்வேறு கோணங் களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story