விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி பணத்திற்காக வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலை ஜப்தி செய்யப்படும் வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தகவல்
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கி பணத்திற்காக வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலை ஜப்தி செய்யப்படும் என்று வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்வேல்முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மணிஸ் நாராணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவைவிட 61 சதவீதம் அதிகம் பெய்து உள்ளது. தற்போது அணைகளில் 49 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 29 சதவீதம் மட்டுமே நீர்இருப்பு இருந்தது. நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 16 ஆயிரத்து 837 எக்டேரும், சிறு தானியங்கள் 2ஆயிரத்து 168 எக்டேரும் பயிரிடப்பட்டுள்ளன.
பிசான பருவ பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
பிரதம மந்திரியின் நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகளான மழைத்தூவான்கள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் சொட்டு நீர்பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேளாண்துறை செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மானிய விபரம் இடுபொருட்கள இருப்பு விபரம்், பயிர்காப்பீடு விபரம், வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் வானிலை மற்றும் வானிலை முன் அறிவிப்பு விவரங்களை அறிந்து கொள்ள இயலும். பிசான பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 30.11.2018 ஆகும்.
ஒவ்வொரு மாதமும்் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டங்களிலும் விவசாயிகள் தங்களது மனுக்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோட்ட அளவில் நடைபெறுகின்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெரும்பலான அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது. அங்கு கொடுக்கின்ற மனுக்களுக்கு முறையாக அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை என்று கூறி விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர்:- தற்போதைய நடைமுறையே தொடரும் நீங்கள் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலேயே மனு கொடுக்கலாம்.
விவசாயிகள்:- பாபநாசம் பொதிகையடி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. தோட்டங்களில் உள்ள தேங்காய்களை நாசப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வனஅதிகாரி: குரங்குளை கூண்டு வைத்து பிடித்து வருகிறோம். தொடர்ந்து பிடிப்போம்.
விவசாயி:-பாவூர்சத்திரம், நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்களில் கத்தரிக்காயை மூட்டையுடன் எடை போடுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தனித்தனியாக எடைபோடவேண்டும்.
பழனிச்சாமி:- வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலை, விவசாயிகளிடம் வாங்கிய கரும்பை அரைத்து சீனி தயாரித்து விற்பனை செய்து விட்டு இன்னும் கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிக்கிறது. அரசு நிர்ணயித்த பணத்தையும், ஊக்கத்தொகையையும் வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது. இது குறித்து கலெக்டரிடம் பலமுறை பேசியும் போராட்டம் நடத்தியும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே வருகிற 1-ந்தேதி(வியாழக்கிழமை) வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர்:- விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய பணத்தை அந்த ஆலை நிர்வாகம் உடனே வழங்கவேண்டும். இல்லை எனில் ஆலையை ஜப்தி செய்து அதில் இருந்து கிடைக்கின்ற பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று கலெக்டர், ஆலை நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். எனவே விவசாயிகளுக்கு ஆலை வழங்கக்கூடிய பணத்திற்காக ஆலை ஜப்தி செய்யப்படும்.
பழனிச்சாமி:- ஆலையை ஏற்கனவே ஜப்தி செய்து இருக்கவேண்டும். தற்போது ஆலையில் சீனி உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லை பழைய பொருட்கள் தான் கிடக்கின்றன. எப்படியாவது விவசாயிகளுக்கு பணத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜாகீர் உசேன்:- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கொடுக்கின்ற மனுக்களுக்கு முறையாக பதில் அனுப்புவது இல்லை. கலெக்டர் தலைமையில் நடக்கின்ற கூட்டத்திற்கே இந்த நிலை என்றால் உதவி கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்திற்கு எந்த பதிலும் வராது. கூட்டமும் சரியாக நடைபெறுவது கிடையாது
கருப்பசாமி:- கடந்த 2016-2017-ம் ஆண்டு பயிர்காப்பீடு செய்த மக்காசோளத்திற்கும், வாழைக்கும் இதுவரை காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர்: பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story