நரசீபுரம் அருகே வவ்வால் வேட்டையாடியதாக 4 பேர் கைது
நரசீபுரம் அருகே வவ்வால் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
பேரூர்,
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்டது நரசீபுரம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி மூலம் காட்டுப்பன்றி, முயல், வவ்வால் ஆகியவற்றை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறையினர் நரசீபுரம் பீட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வவ்வால் வேட்டையாடியதாக 2 கையும் களவுமாக பிடித்தனர். மேலும் 2 பேர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். அவர்களை வனத்துறையினர் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். நரசீபுரம் தாண்டி ஜாகீர்நாய்க்கன்பாளையம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தங்கபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33), கணுவாய் அருகே சின்னதடாகத்தை சேர்ந்த சசிகுமார் (44), வெள்ளலூர் கர்ணன் தெருவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (41), வடவள்ளி பி.என்.புதூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த அசோக் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் சேர்ந்து வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் வவ்வால்களை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து வவ்வால், இறைச்சி மற்றும் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் தப்பிசெல்ல முயன்ற போது அசோக் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.