நூற்பாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


நூற்பாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:00 AM IST (Updated: 26 Oct 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

நூற்பாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று 5 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி அறிவுரைப்படி, தமிழ்நாட்டில் உள்ள பின்னலாடை மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய குழுவுக்கு கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான எம்.என்.கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து எம்.என்.கந்தசாமி தலைமையில் 5 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, சம்பளம், ஓய்வூதியம், சிறப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்க ஆலை நிர்வாகத்தினரும், மத்திய, மாநில அரசுகளும் முன்வரவேண்டும்’ என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story