சீகூர் வனப்பகுதியில் வயிற்றில் குட்டியுடன் இறந்து கிடந்த யானை


சீகூர் வனப்பகுதியில் வயிற்றில் குட்டியுடன் இறந்து கிடந்த யானை
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

சீகூர் வனப்பகுதியில் வயிற்றில் குட்டியுடன் யானை ஒன்று இறந்து கிடந்தது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியாக இருக்கும் சீகூர் வனச்சரகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் உள்பட பல்வேறு அரிய வனவிலங்குகள் உள்ளன. மிகவும் பாதுகாக்கபட்ட பகுதி என்பதால் இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது.

எனவே இந்த வனப்பகுதியில் தினந்தோறும் வேட்டை தடுப்பு காவலர்களும், வனத்துறை ஊழியர்களும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறியூர் அருகே உள்ள கோணமாசி வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கம் போல் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடித்தனர். அது குறித்து சீகூர் வனச்சரகர் செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. அதனை தொடர்ந்து நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற வனச்சரகர் செல்வம், கால்நடை மருத்துவர் டேவிட் மோகன் மற்றும் வனத்துறையினர் இறந்து கிடந்த அந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் அந்த பெண் யானைக்கு சுமார் 11 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் வயிற்றில் சுமார் 10 மாத குட்டி யானை இறந்த நிலையில் இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், கர்ப்பமாக இறந்த பெண் யானையை ஆண் யானை உறவு கொள்ள முயற்சி மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த பெண் யானை இறந்துள்ளது, என்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் யானையின் உடல் அதே இடத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டது.


Next Story