ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சி; சத்துணவு ஊழியர்கள் 152 பேர் கைது


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சி; சத்துணவு ஊழியர்கள் 152 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற சத்துணவு ஊழியர்கள் 152 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

ஊதிய குழுவால் வரவேற்கப்பட்ட ஊதியம் மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாநில சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இதையொட்டி ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்குள் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை 8 மணிக்கு நுழைந்தனர். அப்போது அங்கு போலீசார் இல்லை.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்த சத்துணவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி சத்துணவு ஊழியர்களை போலீசார் கேட்டு கொண்டனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காலை 10.30 மணிக்கு சத்துணவு ஊழியர்களை போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அலுவலக வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து வாயில் கதவுகளை போலீசார் மூடினர். தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயா தலைமை தாங்கினார். செயலாளர் சிவதாஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் சத்துணவு ஊழியர்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் மீண்டும் நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சத்துணவு ஊழியர்கள் 152 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது மாவட்ட செயலாளர் சிவதாஸ் கூறியதாவது:–

அரசு அமைத்த ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றும் அமைப்பாளர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story