29–ம் ஆண்டு நினைவு தினம் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி


29–ம் ஆண்டு நினைவு தினம் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

கெத்தையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு 29–ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தையில் குந்தா நீர்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நீர்மின் நிலையம் அருகிலேயே குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 80–க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1989–ம் ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை நீலகிரி மாவட்டத்தில் பெய்ய தொடங்கியது. அக்டோபர் மாதம் 25–ந் தேதி இரவு சுமார் 9.15 மணி அளவில் கெத்தையில் நீரிடி ஏற்பட்டது.

அதாவது வானத்தில் இருந்து ஒட்டுமொத்த மழையும் கெத்தை பகுதியில் பெய்தது. இதனால் அப்பகுதியில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்து ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் 40 குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த கோர சம்பவத்தில் அடுத்தடுத்து 54 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் நினைவாக மின்வாரிய குடியிருப்பு அருகில் கடந்த 1990–ம் ஆண்டு நினைவு தூண் எழுப்பப்பட்டு இறந்தவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் 1990–ம் ஆண்டு முதல் இறந்தவர்களின் கும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

29–வது ஆண்டாக நேற்று நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. கெத்தை மின் வாரிய செயற்பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், அண்ணாமலை மற்றும் கோபாலகிருஷ்ணன், வில்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story