பாலியல் புகார் விவகாரம்: நடிகர் அம்பரீஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அர்ஜூன், சுருதி ஹரிகரன் சமரச தீர்வை ஏற்க மறுப்பு


பாலியல் புகார் விவகாரம்: நடிகர் அம்பரீஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அர்ஜூன், சுருதி ஹரிகரன் சமரச தீர்வை ஏற்க மறுப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் புகார் விவகாரத்தில் அர்ஜூன், சுருதி ஹரிகரன் ஆகியோர் சமரச தீர்வை ஏற்க மறுத்ததால் நடிகர் அம்பரீஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பெங்களூரு, 
நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்‘ என்ற படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மய‘ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்தபோது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ‘ இயக்கம் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தமிழ், கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அர்ஜூன் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு குறிப்பாக கன்னட திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.

அர்ஜூனுக்கு பல்வேறு நடிகர்-நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுருதி ஹரிகரனுக்கும் பலரும் ஆதரவு வழங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பொய்யான புகார் தெரிவித்ததாகவும், அதனால் சுருதி ஹரிகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் அர்ஜூனின் மாமனார் ராஜேஸ் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஆலோசனை நடத்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானித்தனர். அதன்படி நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை பெங்களூரு சிவானந்தா சர்க்கிளில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கியது.

இதில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் சென்னேகவுடா, தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா உள்பட நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரன், குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் அர்ஜூன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பேசிய அம்பரீஷ், “திரைத்துறையில் நடிகர்களுக்கு பிரச்சினை எழும்போது, நாங்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்த வரலாறு உண்டு. அந்த அடிப்படையில் இப்போது எழுந்துள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நாங்கள் யாருக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ கிடையாது“ என்றார்.

அதைத்தொடர்ந்து அம்பரீஷ், தனி அறையில் சுருதி ஹரிகரனை அழைத்து பேசினார். நிபுணன் படப்பிடிப்பின்போது, அர்ஜூன் எவ்வாறு பாலியல் தொல்லையை கொடுத்தார் என்பது பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். தனக்கு நேர்ந்த நிகழ்வுகள் பற்றி சுருதி ஹரிகரன் முழு விவரங்களையும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து சுருதி ஹரிகனை கூட்ட அரங்கிற்கு அனுப்பிவிட்டு, அர்ஜூனை அழைத்து அம்பரீஷ் தனியாக பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் உங்கள் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலென்ன என்று கேட்டு விவரங்களை பெற்றார். தான் எந்த வகையிலும் சுருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும், திரைப்பட படப்பிடிப்பு சார்ந்த விஷயங்கள் மட்டுமே நடந்ததாகவும் கூறினார். இருதரப்பு தகவல்களை சேகரித்த பிறகு நடிகர் அம்பரீஷ் கூட்ட அரங்கிற்கு வந்து பேசினார்.

இருப்பினும் அர்ஜூனும், சுருதி ஹரிகரனும் இந்த விவகாரத்தில் சமரச தீர்வை ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு அம்பரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘மீ டூ‘ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது தற்போது திரைத்துறைக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எனது தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிகர் அர்ஜூன் மற்றும் நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேசினேன். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வை என்னிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்காக இருவரும் வேதனையை தெரிவித்தனர்.

இதில் யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாது. கன்னட திரைத்துறையில் முதல் முறையாக இத்தகைய பாலியல் நிகழ்வு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. திரைத்துறையில் எழும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துள்ளோம். அந்த அடிப்படையில் இன்று(நேற்று) பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த விவகாரத்தை இத்துடன் கைவிட வேண்டும் என்று இருவரிடமும் கூறினேன். அவர்கள் அதுபற்றி தங்களின் முடிவை கூறவில்லை. இந்த விஷயங்களில் அவர்களுக்கு காலஅவகாசம் கொடுத்துள்ளோம். அதற்குள் தங்களின் இறுதி முடிவை தெரிவிக்குமாறு கூறி இருக்கிறேன். திரைத்துறையில் எழுந்த பிரச்சினையில் இந்த விவகாரம் முதல் முறையாக கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க நான் ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டு அல்ல. இருவரும் சுமுகமாக போனால் மட்டுமே, பிரச்சினையை தீர்க்க முடியும். இந்த காலத்தில் யாரும் ஒருவருடைய பேச்சை இன்னொருவர் கேட்பது இல்லை. இருவரும் கைகுலுக்கி விட்டு சிரித்த முகத்துடன் செல்லுமாறு கூறினேன். ஆனால் நான் கூறிய சமரச தீர்வை இருவரும் ஏற்கவில்லை.

இவ்வாறு அம்பரீஷ் கூறினார்.

இதற்கிடையே அர்ஜூனின் ஆதரவாளர் ஒருவருக்கு செல்போனில் வந்த அழைப்பில், தான் சுருதி ஹரிகரன் உதவியாளர் என்றும், ரூ.2 கோடி கொடுத்தால் இந்த விவகாரத்தை இத்துடன் கைவிட்டுவிடுவதாகவும் பேசினார் என்று கூறப்பட்டது.

Next Story