பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 110 பேர் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 110 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, இணை செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன் வரவேற்றார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் பேசினார். இதில் சங்கத்தை சேர்ந்த இளவரசன், பாலசுப்பிரமணியன், மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் துர்க்காம்பிகா நன்றி கூறினார்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தகுதி வாய்ந்த சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

21 மாத கால நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். சத்துணவு மையத்திற்கு சமையல் எரிவாயு மானியத்தை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இந்தநிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 85 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story