குக்கே சுப்பிரமணியா கோவில் பற்றி முகநூல் கருத்தால் இருதரப்பு மோதல்: இந்து அமைப்பு தலைவரை தாக்கியதாக பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு கடைகள் அடைப்பு- பரபரப்பு


குக்கே சுப்பிரமணியா கோவில் பற்றி முகநூல் கருத்தால் இருதரப்பு மோதல்: இந்து அமைப்பு தலைவரை தாக்கியதாக பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு கடைகள் அடைப்பு- பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

குக்கே சுப்பிரமணியா கோவில் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து அமைப்பு தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மங்களூரு, 
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் குக்கே சுப்பிரமணியா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் செய்வது தொடர்பாக அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகத்திற்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்த சைத்ரா என்பவர் முகநூல் பக்கத்தில் குக்கே சுப்பிரமணியா கோவில் பற்றியும், கோவில் நிர்வாகத்தை பற்றியும் அவதூறான கருத்துகளை பரப்பி வந்ததாக தெரிகிறது.

இதனை பார்த்த இந்து அமைப்பு தலைவரான குருபிரசாத் என்பவர், முகநூல் பக்கத்தில் சைத்ராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் முகநூலில் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தைரியம் இருந்தால் குக்கேவுக்கு வரும்படி சைத்ராவுக்கு, குரு பிரசாத் சவால் விடுத்ததாக தெரிகிறது.

அந்த சவாலை ஏற்றுக் கொண்டு நேற்று முன்தினம் சைத்ரா தனது நண்பர்கள் 7 பேருடன் குக்கேவுக்கு வந்தார். இதுபற்றி அறிந்ததும் அங்கு குருபிரசாத் தனது நண்பர்கள் சிலருடன் வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் சைத்ரா தரப்பினருக்கும், குருபிரசாத் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இந்த மோதலில் குருபிரசாத் பலத்த காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்து அமைப்பு தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று குக்கேயில் கடை அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நேற்று குக்கேயில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் தாக்குதலில் காயம் அடைந்த குருபிரசாத் அளித்த புகாரின்பேரில் சைத்ரா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிகாந்தே கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவில் குறித்து அவதூறு பரப்பியதால் ஏற்பட்ட தகராறில் இந்து அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே குருபிரசாத், சைத்ரா தரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story