கிராம பஞ்சாயத்து கணக்காளர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் திருட்டு
கிராம பஞ்சாயத்து கணக்காளர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஜவுளிஇரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மதிகலப்பா. கிராம பஞ்சாயத்து கணக்காளர். இந்த நிலையில் மதிகலப்பா தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்று விட்டனர். கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து மதிகலப்பா பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருடு போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடூர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வந்தது. அங்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்கள். மோப்ப நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் பதிவு செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். திருட்டு சம்பவம் குறித்து மதிகலப்பா அளித்த புகாரின்பேரில் கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story