திருப்புவனம் வைகையாற்று தடுப்பணை பகுதியில் தொடரும் மணல் கடத்தல்; நீர்வளம் பாதிக்கும் அபாயம்
திருப்புவனம் வைகையாற்று தடுப்பணை பகுதியில் தலைச்சுமையாக மூடைகளில் மணல் கடத்தல் தொடர்வதால் நீர்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் வைகையாற்று பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வந்தது. அதன் பின்னர் காலப்போக்கில் தண்ணீர் வரத்து இல்லாமல் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வந்தது. சில ஆண்டுகளாக அதுவும் இல்லாமல் இருந்தது. திருப்புவனம் வைகையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கரையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு திருப்புவனம் நகருக்கு குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.
அதன் பின்னர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கும், மதுரை மாநகருக்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்காக அடுத்தடுத்து ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் எடுத்துச் சென்றனர். தினமும் பல லட்சம் லிட்டர் கணக்கில் குடிநீர், நீரேற்றும் நிலையம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் ஆற்றில் தண்ணீர் சரியாக வராதததால் கடும் வறட்சி ஏற்பட்டது. திருப்புவனம் நகரில் குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் வைகையாற்றில் நடைபெற்ற தொடர் மணல் திருட்டு சம்பவத்தாலும், கடும் வெயிலாலும் குடிதண்ணீர் ஆதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் வைகையாற்றில் தடுப்பணை கட்டினால் தண்ணீர் தேக்கம் அடையும் என்றும், அதன் மூலம் குடிதண்ணீர் ஆதாரம் பெருகும் என்று கருதி திருப்புவனத்தில் வைகை மேம்பாலம் அருகில் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் பொதுப்பணித்துறை மூலம் தடுப்பணை கட்டப்பட்டது. தற்சமயம் வைகையணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இந்த தடுப்பணையில் தேங்கியுள்ளது.
இதன் மூலம் திருப்புவனம் நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பணை அருகே பகல் நேரத்தில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சிலர் சாக்கு மூடைகளில் தலைச்சுமையாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து மணல் அள்ளிய இடங்கள் எல்லாம் தற்போது பெரிய அளவில் பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு சம்பவம் நடைபெற்றால் தடுப்பணையின் நிலைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.