மெலட்டூர் அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பி விவசாய பணிகள் பாதிப்பு


மெலட்டூர் அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பி விவசாய பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 10:30 PM GMT (Updated: 25 Oct 2018 7:44 PM GMT)

மெலட்டூர் அருகே வயல்களில் மின்கம்பி தாழ்வாக செல்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே சுரைக்காயூர் கிராமம் உள்ளது. இங்கு தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வயல்கள் வழியாக மின்கம்பி தாழ்வாக செல்வதால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மின்கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது. உயிர் பலி ஏற்படும் முன்பாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

சுரைக்காயூர் பகுதியில் வயல்கள் வழியாக மின்கம்பி தாழ்வாக செல்வதால் விவசாய பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. முன்பு ஆட்கள் மூலமாக விவசாய பணிகள் நடைபெற்றன. தற்போது எந்திரங்கள் மூலமாக பணிகள் நடக்கின்றன. வயல்களுக்குள் எந்திரங்களை கொண்டு வந்தால் மின்கம்பி மீது உரசி, ஆபத்து நேரிடும். இதனால் அச்சத்தில் இருக்கிறோம்.

வேளாண்மை எந்திரங்களை வயல்களுக்குள் இறக்க முடியவில்லை என்றால் விளை நிலங்கள் தரிசாக மாறும். இப்பகுதியில் மின்கம்பங்கள் பல அபாய நிலையில் காட்சி அளிக்கின்றன. அவை பலத்த காற்று வீசும்போது கீழே சாய்ந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பியையும், மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story