டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாத டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாத டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்படாமல் தேங்கி கிடந்ததாக டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ வைக்க அவர் உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, நேற்று காலை காஞ்சீபுரம் நகரில் திடீரென டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், “பொதுமக்கள் அதிகம் வரும் இடமான இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி உரிய இடத்தில் கொட்டவேண்டும்” என அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர்கள் என பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைக்கும் வகையில் செயல்பட்டதாக அந்த டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளின் அருகில் உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் அகற்றப்படாமல் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வண்ணம் அசுத்தமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் பொன்னையா கடுமையாக எச்சரித்தார்.

Next Story