இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் தங்கம் பறிமுதல்


இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:15 PM GMT (Updated: 25 Oct 2018 7:56 PM GMT)

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் தங்கத்தை மத்திய சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் ஒன்று நேற்று மதுரை விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. ஆனால் தங்கம் ஏதும் பிடிபடவில்லை. அதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணிகள் இருக்கையின் அடியில் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்கத்தை எடுத்தனர். அது கடத்தல் தங்கம் என தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.45 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தங்கத்தை சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொழும்புவில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர், மதுரை விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருந்ததால் பயந்து தங்கத்தை விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரவில்லை. இருக்கைக்கு அடியிலேயே வைத்துவிட்டு இறங்கி உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பயணிகளின் விவரங்கள் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்ட இருக்கையில் பயணித்தவரின் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story