கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோலையன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜராஜேஸ்வரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் உணவு மானியத்தொகையை ஒரு குழந்தைக்கு ரூபாய் 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சக ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே உணவு சமைத்து வழங்கினர். போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.


Next Story