தேர்தல் நேரத்தில் ‘சிலிப்பர் செல்’ வெளியே வருவார்கள் - டி.டி.வி.தினகரன் பேட்டி


தேர்தல் நேரத்தில் ‘சிலிப்பர் செல்’ வெளியே வருவார்கள் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2018 5:00 AM IST (Updated: 26 Oct 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நேரத்தில் ‘சிலிப்பர் செல்‘ வெளியே வருவார்கள், நாங்கள் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம் என்று மதுரையில் அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரை,

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் குற்றாலம் சொகுசு விடுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்து தங்கினர்.

அவர்களை சந்திக்க சென்னையில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரவு 9.30 மணி அளவில் அந்த ஓட்டலுக்கு வந்தார். தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 18 எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை செய்து நாளை (இன்று) முடிவு எடுக்கப்படும்.

இந்த தீர்ப்பு அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த தீர்ப்பானது அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வை பாதுகாக்க அ.ம.மு.க. கட்சியினரால்தான் முடியும்.

இரட்டை வேடம் போடுபவர்கள் கையில் அ.தி.மு.க. உள்ளது. ஆட்சி மாற்றம் வரும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என்று என்னை கூறுகிறார்கள். பிறகு ஆர்.கே.நகரில் எனக்காக ஏன் வாக்கு சேகரித்தார்கள்? இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் ‘சிலிப்பர் செல்‘ வெளியே வருவார்கள்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. அ.தி.மு.க.வில் 12 அமைச்சர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story