கொள்ளிட ஆற்றில் மணல் அள்ள அனுமதி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கொள்ளிட ஆற்றில் மணல் அள்ள அனுமதி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிட ஆற்றில் மணல் அள்ள அனுமதி வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், கொள்ளிடத்தில் மேலணை முதல் கீழணை வரை 10 கி.மீ. தூரம் தடுப்பணை கட்ட வேண்டும். புள்ளம்பாடி வாய்காலில் கடை கோடியில் உள்ள தூத்தூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே வரத்து வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். மேலராமல்லூர் பாலம் முதல் வைப்பூர் வரை கொள்ளிடம் வடகரையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்றார்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிருக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச தொகையை வழங்க வேண்டும். மருதையாறு மற்றும் கோவில்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, அரியலூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் பேசுகையில், பொன்னாற்று தலைப்பில் கதவணையுடன் தடுப்பணை கட்ட வேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமெண்டு ஆலைகள் நிலத்தடி நீரை எடுத்து ஆலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். உடையார்பாளையம் ஆண்டிமடம் மற்றும் செந்துறை, பகுதி விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகள் இலவசமாக வழங்க வேண்டும். உளுந்து பயிருக்கு காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். இலங்கைச்சேரி கீழராயம் புரம் இணைப்பு சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். விளவன் ஏரியை தூர்வார வேண்டும் என்றார்.

தமிழக அம்பேத்கர் விவசாய இயக்கம் தலைவர் அம்பேத்கர் வழியன் பேசுகையில், சம்பா பயிர் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளதால், விவசாய இடுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நட வடிக்கை வேண்டும். கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் பயிர்கடன் முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். திருமானூர், ஏலாக்குறிச்சி, குருவாடி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்ளிட ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தவும், விவசாயிகளுக்கு பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டான்பெட்கோ மூலம் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று போர்வெல் அமைத்து உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும். மானாவாரி பயிரில் பூச்சி தாக்கி விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க கூடிய நிலை உள்ளது. எனவே, ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சிமெண்டு ஆலைக்கு மண் எடுக்கும் லாரிகள் மூலம் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகளுக்காக தனிப்பாதை அமைக்க வேண்டும் என்றார்.

கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன் பேசுகையில், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து திருமானூர் பகுதிகளில், கரும்பு மற்றும் நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும். பிராய்லர் கோழிவளர்ப்புக்கு வங்கி கடன் வழங்குவது போல நாட்டுக்கோழிகள் வளர்க்க வங்கி கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) லலிதா, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story