ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம் எதிரொலி: சாராய ஆலையை பூட்டி கடை உரிமையாளர்கள் போராட்டம்
ஆரியப்பாளையத்தில் உள்ள வடிசாராய ஆலையை, சாராயக் கடை உரிமையாளர்கள் பூட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்,
வில்லியனூரை அடுத்த ஆரியப்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 186 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் உயர்த்தப்படவில்லை. அதை கண்டித்தும், சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரியும் சாராய ஆலை ஊழியர்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தியும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் அவர்களுக்கு இந்த மாதம் (அக்டோபர்) முதல் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே உறுதி கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரவில்லை. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வந்துள்ள நிலையில் சாராய ஆலை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே தீபாவளி போனஸ் வழங்கக்கோரியும், தீபாவளி பரிசு கூப்பன் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரியும் சாராய ஆலை ஊழியர்கள் நேற்று முன்தினம் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நேற்று அவர்களின் போராட்டம் 2–வது நாளாக நீடித்தது. நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக சாராய ஆலையில் சாராயம் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அதனால் சாராயக் கடைகளுக்கு சாராயம் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறியும், அதனால் சாராயக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சாராயக் கடை உரிமையாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடிசாராய ஆலை முன்பு திரண்டு ஆலையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சாராய ஆலை ஊழியர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் ஆலை சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்தார். அவர் சங்க நிர்வாகிகளுடன் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்ததையின்போது, ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி, இன்னும் இரண்டொரு நாட்களில் நிறைவேற்றி தரப்படும் விஜயவேணி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அதனை ஏற்று சாராய ஆலை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.