பல்லாவரத்தில் பெண்ணிடம் ரூ.35 லட்சம் மோசடி தோழிகள் 2 பேர் போலீசில் சிக்கினர்
பல்லாவரத்தில் பெண்ணிடம் தொழில் முதலீட்டுக்காக வாங்கிய ரூ.35 லட்சத்தை மோசடி செய்த தோழிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் தேவி (வயது 33). இவர் அந்த பகுதியில் துணிக்கடை வைத்து உள்ளார். இவரது தோழி நாகஜோதி (34). தேவிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதை சரி கட்ட அவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள வசதியான பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை இரட்டிப்பு செய்து ரூ.2 லட்சமாக தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இவர்களிடம் பழைய பல்லாவரம் மல்லிகாநகரை சேர்ந்த ஜீவா என்பவரும் சிக்கினார். அவரிடம் பணம் இரட்டிப்பு செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறினர். மேலும் அவரிடம் தேவி தனது தொழிலான கார்மெண்ட்ஸ் தொழிலில் முதலீடு செய்தால், முதலீடு தொகைக்கு இரட்டிப்பாக பணத்தை திருப்பி தருவதாக 2 பேரும் கூறியுள்ளனர். இதற்கு ஜீவாவும் சம்மதம் தெரிவித்தார்.
அவர்கள் கூறியபடி கார்மெண்ட்ஸ் தொழில் முதலீட்டுக்காக ஜீவா, சிறிது சிறிதாக, 35 லட்சம் ரூபாயை 2 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. ஜீவா அவர்களிடம் பணத்தை கேட்டதற்கு, சரியான பதிலும் இல்லை.
இதையடுத்து, பல்லாவரம் போலீஸ் நிலையத்தில், ஜீவா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்றுமுன்தினம் மாலை தோழிகளான தேவி, நாகஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story