அரசு பள்ளியை கிராம மக்கள் முற்றுகை பாடம் நடத்தும்போது ஆசிரியர் ஆபாசமாக பேசியதாக புகார்


அரசு பள்ளியை கிராம மக்கள் முற்றுகை பாடம் நடத்தும்போது ஆசிரியர் ஆபாசமாக பேசியதாக புகார்
x
தினத்தந்தி 25 Oct 2018 11:00 PM GMT (Updated: 25 Oct 2018 9:05 PM GMT)

துறையூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கரட்டாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக செந்தில்குமார்(வயது 35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விலங்கியல் பாடம் நடத்தி வந்தார்.

இவர் பாடம் நடத்தும்போது மாணவ, மாணவிகளிடம் பாடத்தில் உள்ள கருத்துகளை கூறும்போது ஆபாசமாக பேசியதாக சில மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் கூறினர். இதையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்கள். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த முசிறி கல்வி மாவட்ட அதிகாரி பாலசுப்ரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த ஆசிரியர் பற்றி சில மாணவிகள் மட்டும் புகார் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவம் உண்மையா என்று விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அங்கிருந்து கிராமமக்கள் கலைந்து சென்றார்கள்.

Next Story