நீலாங்கரையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது; 2 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
நீலாங்கரையில் 70 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 2 கார்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
சென்னையை அடுத்த நீலாங்கரை சிவன் கோவில் தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுவர் அருகே மணல் கொட்டப்பட்டதாக தெரிகிறது. இதில் பாரம் தாங்காமல் சுமார் 70 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து திடீரென விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சுவரின் அருகில் சாலையோரம் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சுவர் அவற்றின் மீது விழுந்தது. இதில் 2 கார்களும், 12 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நீலாங்கரை போலீசாரும், அப்பகுதி பொதுமக்களும் விரைந்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சுவரின் இடிபாடுகளில் மக்கள் யாரேனும் சிக்கி உள்ளனரா? என்று பார்வையிட்டனர். ஆனால் யாரும் சிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இதனையடுத்து சுவர் இடிபாடுகளை அகற்றி வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள். மணல் கொட்டியதால் சுவர் இடிந்து விழுந்ததா? அல்லது தரமின்றி கட்டப்பட்டதால் சுவர் இடிந்து விழுந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story