சிட்லிங்கில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.83 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்


சிட்லிங்கில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.83 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 25 Oct 2018 9:45 PM GMT (Updated: 25 Oct 2018 9:43 PM GMT)

சிட்லிங்கில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

அரூர், 


தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சிட்லிங்கி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அண்ணாமலை, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் அஜய் சீனிவாசன், கால்நடை பராமரிப்புதுறை துணை இயக்குனர் பாரதி, உதவி இயக்குனர் வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வீட்டுமனைப்பட்டா, கூட்டுறவு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 210 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது சிட்லிங் மலைப்பகுதி. இப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மலைவாழ் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பொது மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்டு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற பொதுமக்கள் முன்வர வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பலர் நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துகொள்வதால் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பது அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இளம் வயது திருமணங்கள் செய்து வைப்பதால் பல்வேறு உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, பெண்களுக்கு 18 வயது நிறைவடைந்த பின்பும், ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்த பின்புமே திருமணம் செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் வளர் இளம் பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இணை உணவு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணை உணவு இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த முகாமில் தாட்கோ மாவட்ட மேலாளர் விமலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நாகலட்சுமி, கலால் உதவி ஆணையர் முத்தையன், ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதாராணி, பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுறவு துணைப்பதிவாளர் ரவிசந்திரன், தாசில்தார் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story