அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சராக்க பா.ம.க.வினர் பாடுபட வேண்டும் - ஜி.கே.மணி பேச்சு


அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சராக்க பா.ம.க.வினர் பாடுபட வேண்டும் - ஜி.கே.மணி பேச்சு
x
தினத்தந்தி 26 Oct 2018 3:15 AM IST (Updated: 26 Oct 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சராக்க பா.ம.க.வினர் பாடுபட வேண்டும் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

புவனகிரி, 

கடலூர் ஒருங்கிணைந்த பா.ம.க. நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முருகன், சுரேஷ், மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்டம் பா.ம.க.வின் கோட்டை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எப்போதும் சொல்வார். பா.ம.க. தான் தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி. நம் கட்சியில் தான் அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்-அமைச்சராக ஆக வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் தீவிர பணியாற்ற வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும். இதனால் இந்த திட்டத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்துக் சொல்ல வருகிற 27-ந்தேதி (நாளை) கடலூர் மாவட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்று புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் விளைவுகளை தெரிவிக்கும் வகையில் துண்டுபிரசுரங்களை பொது மக்களிடையே வழங்குகிறார். பின்னர் அன்று கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 28-ந் தேதி (நாளைமறுநாள்) நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அன்று மாலை மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 29-ந்தேதி சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் செல்வமகேஷ், ஜெகன், வீரமணி, முத்துக்குமார், சவுராஜா, தர்மலிங்கம், சிவபிரகாசம், ராஜ்குமார், கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story