மெட்ரோ ரெயில் பணிகளால் சென்னையில் நிலத்தடி நீர் பாதிப்பா? அதிகாரிகள் விளக்கம்
மெட்ரோ ரெயில் பணிகளால் சென்னையில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இந்தியாவில் சென்னை உள்பட 21 மாநகரங்களில் இன்னும் 2 ஆண்டுகளில் நிலத்தடிநீர் முற்றிலுமாக தீர்ந்து விடும் நிலை ஏற்படும் என கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் தகவல் வெளியிட்டது. இது சென்னையில் வாழும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சென்னையின் மக்கள்தொகை கோடியை எட்டும் நிலையில் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து கொண்டுவரப்படும் நீரும், கடல்நீரை குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து தயாரிக்கப்படும் குடிநீரும் வினியோகம் செய்யப்படுகிறது. பலரும் கேன் தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.
இன்னும் 2 ஆண்டுகளில் அன்றாட தேவைகளுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால், பல குடும்பங்கள் தண்ணீரை தேடி இடம்பெயரும் சுற்றுச்சூழலும், அகதிகளாக வாழவேண்டிய நிலையும் வரும்.
இதுதவிர சென்னையில் பல இடங்களில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கடற்கரையோர குடியிருப்புகளில் உப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. சென்னையின் மத்திய பகுதிகளிலும் இதேநிலை ஏற்பட்டு உள்ளது என்று சுற்றுச்சூழல்வாதிகள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததற்கு மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஒரு காரணம் என்று பரவலாக அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, சென்டிரல், அண்ணாசாலை போன்ற பகுதிகளில் சுரங்கம் அமைக்கும்போது ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள் சேதப்படுத்தப்பட்டன.
அத்துடன் பூமிக்கடியில் கான்கிரீட் தளங்கள் அமைத்ததால் நிலத்தடி நீரோட்டம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் தடைபட்டதுடன், நிலத்தடி நீர் வறண்டு விட்டது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் வழக்கத்தை விட ஆழத்துக்கு சென்றுவிட்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை நிலத்தடி நீர் மட்டம் வழக்கத்தை விட அதிக ஆழத்துக்கு மெட்ரோ ரெயில் பணியால் சென்றுவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறு. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளித்து உள்ளனர். அதில் மெட்ரோ ரெயில் திட்டப்பணியால் நிலத்தடி நீர் மட்டம் எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளனர்’ என்றனர்.
இதற்கிடையே நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
கடந்த 2013-2015-ம் ஆண்டு காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட 1,200 நிலத்தடி நீர் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி, நீரின் தன்மை, நிலத்தடி நீரை பெருக்குவது எப்படி? போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து வீடுகள் அமைத்தது சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கு வழி வகுத்து வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், முகப்பேர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நீர் நிலைகள் காணாமல் போயுள்ளன. இவை நமக்கு அழிவை உணர்த்துகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story