செந்துறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்-ஊழியர்களை நியமிக்க கோரி நோயாளிகள் தர்ணா


செந்துறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்-ஊழியர்களை நியமிக்க கோரி நோயாளிகள் தர்ணா
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு போதிய டாக்டர்களும், ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்று செயல்பட்டு வருகிறது.

செந்துறை,

போதிய டாக்டர்களும், ஊழியர்களை மருத்துவமனையில் நியமிக்க கோரி, அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இதுநாள் வரை போதிய டாக்டர்கள், ஊழியர்களை அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது செந்துறை தாலுகா முழுவதும் உள்ள கிராமங்களில் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் வேறு மருத்துவமனையிலிருந்து பணிக்கு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆனால் அங்கு டாக்டர் யாரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதிய டாக்டர்கள், ஊழியர்களை மருத்துவமனையில் நியமித்து 24 மணி நேரமும் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story