சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை; திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் தனது வீட்டின் அருகே ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19–ந்தேதி அந்த வழியாக 3 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த ஆனந்த், மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளார்.
அங்கு வந்த சிறுமியை, அவர் ஒர்க்ஷாப் அருகிலேயே பூட்டிக்கிடந்த கடைக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அங்கு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த ஆனந்தை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்துக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஆனந்தை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.