கடலூர் சிறையில் கொரடாச்சேரி கைதி சாவு 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்


கடலூர் சிறையில் கொரடாச்சேரி கைதி சாவு 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சிறையில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த கொரடாச்சேரி கைதி பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி போலீஸ் சரகம் திருவிடைவாசலை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 50). இவர் 1995-ம் ஆண்டு இடப்பிரச்சினை காரணமாக தனது அண்ணன் கல்யாணப்பரிசு என்பவரை கட்டையால் தாக்கி கொலை செய்தார். இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்ட்டு விசாரணையில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதன்பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பத்மநாபன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 30.7.2003-ம் ஆண்டு 3 நாள் விடுப்பில் பரோலில் வந்தார்.

பரோலில் வந்த பத்மநாபன் விடுப்பு முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் கடந்த 4.8.2018 அன்று தலைமறைவாக இருந்த பத்மநாபனை கொரடாச்சேரி போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். கடலூர் சிறையில் இருந்த பத்மநாபனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை அங்குள்ள சிறை மருத்துவமனையிலேயே சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்தநிலையில் பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பத்மநாபன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சகோதரர் ரமேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பத்மநாபன் மீண்டும் சிறைக்கு சென்று 3 மாதத்திற்குள் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.


Next Story