டீசலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
டீசலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி, பெட்ரோல் விற்பனை நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
அவினாசி,
அவினாசி–மங்கலம் சாலையில் கருணைபாளையம் பிரிவு அருகே ஹெச்.பி. (இந்துஸ்தான் பெட்ரோலியம்) பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஆட்டோவுக்கு டீசல் நிரப்ப ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். பின்னர் ஆட்டோவுக்கு டீசல் நிரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த ஆட்டோ ஸ்டார்ட் ஆகாததால் அருகில் உள்ள ஒர்க்ஷாப்புக்கு கொண்டு ஆட்டோவை கொண்டு சென்றார். பின்னர் ஆட்டோவை பழுது நீக்கியபோது டீசலில் மண்எண்ணெய் கலந்து இருப்பதால் என்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை என்று தெரிகிறது. இது குறித்து அந்த ஆட்டோ டிரைவர் அவர் ஆட்டோவை நிறுத்தும் மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களை எடுத்துக்கொண்டு அந்த பெட்ரோல் விற்பனை நிலையதிற்கு நேற்று சென்றனர். பின்னர் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் குமார் கூறும்போது ‘‘ இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆட்டோவுக்கு டீசல் நிரப்பினேன். டீசல் நிரப்பிய மறுநாள் ஆட்டோ ஸ்டார்ட் ஆகவில்லை. எனவே ஒர்க்ஷாப்பில் ஆட்டோவை கொண்டு விட்டபோது, டீசலில் மண்எண்ணெய் கலந்து இருப்பதால் என்ஜின் ஸ்டார்ட் ஆக வில்லை என்று தெரியவந்தது. எனவே ஆட்டோவுக்கு ஆகும் செலவை பெட்ரோல் விற்பனை நிலையத்தினர் ஏற்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது ‘‘ எங்களது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒருபோதும் கலப்படம் செய்ய மாட்டோம். ஆட்டோவின் என்ஜின் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு வேறு காரணம் இருக்கும். எனவே நாங்கள் இதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றனர். இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் குமார், அவினாசி போலீசில் புகார் செய்தார்.