திருக்கோவிலூரில் சம்பவம் : நகைக்கடையில் ரூ.5½ லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு - 2 ஊழியர்கள் கைது
திருக்கோவிலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோத்தம்சந்த். இவர் திருக்கோவிலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியானூரை சேர்ந்த காசிமணி மகன் கார்த்திக்(வயது 31) என்பவர் தங்கம் விற்பனை பிரிவிலும், துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரன் மகன் கார்த்திக்(26), என்பவர் வெள்ளி விற்பனை பிரிவிலும் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்களது நடத்தையில் கோத்தம்சந்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோத்தம்சந்த் நகைக்கடையில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, 150 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் குறைந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர், தங்கம், வெள்ளி விற்பனை பிரிவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஊழியர்கள் இருவரும் தினந்தோறும் சிறுக, சிறுக தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பொருட்களை அவர்கள் வெளியில் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கோத்தம்சந்த் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, நகைக்கடையில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்களான பெரியானூர் கார்த்திக், துறிஞ்சிப்பட்டு கார்த்திக் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story