எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் - தங்க தமிழ்செல்வன் பேட்டி


எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் - தங்க தமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 18 பேரும் மேல்முறையீடு செய்வோம் என்று மதுரையில் அளித்த பேட்டியில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

மதுரை,

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை செல்லும் என மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் வழக்கில் மேல் முறையீடு செய்வதா அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் சுமார் 2½ மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ் செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட 16 பேரும், ஏம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு ஆகிய 3 பேரும், வக்கீல்கள் ராஜாசெந்தூர்பாண்டியன், வேலு கார்த்திகேயன் ஆலோசனையில் பங்கேற்றனர். பல்வேறு பணிகள் மற்றும் உடல்நல குறைவு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், பார்த்திபன் பங்கேற்கவில்லை.

பின்னர் தங்கத்தமிழ் செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். சட்டப்பேரவை தலைவர் செய்த தவறுகளை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லவே இந்த முடிவு. இடைத்தேர்தல் நடந்தாலும் 18 பேரும் போட்டியிடுவோம். வழக்கின் தீர்ப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளன. 90 நாட்களுக்குள் 18 பேரும் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீடு செய்யப்பட்டாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு காரணம் வழக்கை விரைந்து முடித்து நியாயம் கிடைக்க தான். தமிழகத்தில் 22 தொகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நவம்பர் மாதம் 10–ந்தேதி முதல் உண்ணாவிரதம் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சம் பேராக சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க உள்ளோம். மிக விரைவில் 2 அல்லது 3 நாட்களில் வழக்கில் மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு செய்வோம். உச்சநீதிமன்றத்தில் நல்ல நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாரியப்பன் கென்னடி கூறியதாவது:–

யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது. எதிராக செயல்பட்ட ஓ.பி.எஸ்சை சேர்த்து கொண்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். இடைத்தேர்தலில் இரட்டை இலையை தோற்கடித்து நாங்கள் வெற்றி பெறுவோம். ஆர்.பி.உதயகுமார் டாக்டர் வெங்கடேசிடம் காலில் விழுந்து சீட் வாங்கியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story