சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் சமையல் செய்து சாப்பிட்டனர்


சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் சமையல் செய்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

வேலூர்

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், உணவு உண்ணும் மாணவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உணவு மானியத்தை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரிலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நாளான நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர்கள் திடீர் என்று கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்த அனுமதியில்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆஞ்சநேயர் கோவில் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வி.செல்வம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் பி.செல்வம், மாநில செயலாளர் ஆண்டாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story