காரைக்கால் ஜிப்மர் மாணவர்கள் ஜனவரியில் புதுச்சேரிக்கு மாற்றம்
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஜனவரி மாதம் புதுச்சேரி ஜிப்மருக்கு மாற்றப்பட உள்ளதாகவும், இது தற்காலிக ஏற்பாடுதான் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தலா 50 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரியில் போதிய வசதி இல்லாததால் மூடப்பட உள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் புதுவை ஜிப்மர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் கடந்த 2016–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்று செயல்பட்டு வருகிறது. அதற்குப்பின் புதியதாக கட்டப்பட உள்ள ஜிப்மர் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
506 படுக்கைகள் கொண்ட காரைக்காலில் உள்ள புதுச்சேரி அரசின் பொது மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுவை அரசுக்கும் ஜிப்மர் நிர்வாகத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கோவில்பத்தில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தின் 41.75 ஏக்கர் நிலம் மற்றும் காமராஜ் சாலையில் 38.16 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் நிலைநிதிக்குழு கூட்டத்தில் காரைக்காலில் இருநிலைகளில் சுமார் ரூ.975 கோடி செலவில் கல்லூரி நிர்மானிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. மேலும் 336 மருத்துவ பேராசிரியர் பதவிகளும், 1,683 மற்ற பதவிகளும் காரைக்கால் ஜிப்மருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் ஜிப்மரின் 5–வது செமஸ்டர் மாணவர்கள் 2019 ஜனவரியில் தற்காலிகமாக சில மாதங்களுக்கு புதுச்சேரி ஜிப்மரில் அவர்களது மருத்துவ திறமையை வளர்த்துக்கொள்வதற்காக மாற்றப்பட வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது. காரைக்கால் ஜிப்மரின் முதல் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு தயாராக உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி காரைக்கால் ஜிப்மருக்கு அடிக்கல் நாட்ட கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளார்.
காரைக்கால் ஜிப்மரில் உள்ள எம்.பி.பி.எஸ். மாணவர்களுடைய கற்பித்தல் மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் முதல்கட்டத்தில் அமைத்திட ஜிப்மர் நிர்வாகம் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளது. கடந்த 15–ந்தேதி நடந்த நிலைநிதிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ரூ.418 கோடி 2–ம்கட்ட கட்டுமான பணிக்கு கொள்கை அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.