தீபாவளி பண்டிகையை கொண்டாட பணமில்லை என கூறி பழைய துணிகளை விற்பதற்காக எடுத்து வந்த விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


தீபாவளி பண்டிகையை கொண்டாட பணமில்லை என கூறி பழைய துணிகளை விற்பதற்காக எடுத்து வந்த விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை கொண்டாட பணமில்லை என கூறி பழைய துணிகளை விற்பதற்காக தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர்.

அப்போது அவர்கள் பழைய துணிகளை ஒரு மூட்டையாக எடுத்து வந்தனர். மேலும் சட்டையில் கோரிக்கை அட்டையை அணிந்து வந்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட பணமில்லை. எனவே பழைய துணிகளை விற்பனை செய்து தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளோம் என கூறி எடுத்து வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துணி மூட்டையை எடுத்துச்செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து துணிமூட்டையை ஓரமாக போட்டு விட்டு, விவசாயிகள் கூட்டத்திற்கு சென்றனர். பின்னர் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

பின்னர்வெளியே வந்த விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் சுகுமாறன் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் சரிவர சாகுபடி செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு தண்ணீர் வந்தும், ஆற்றில் உடைப்பு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளியை கொண்டாட பணம் இல்லாததால் பழைய துணிகளை விற்று தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக எடுத்து வந்தோம்.

எனவே விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும். அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்”என்றார்.

Next Story