தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கான உணவூட்ட செலவின தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட னர். நேற்று 2-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் உமா தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ரெங்கசாமி, குணசேகரன், மதியழகன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்தின் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்.
சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story