ஹலகூர், மலவள்ளி பகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து குமாரசாமி பிரசாரம்
மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹலகூர், மலவள்ளி பகுதிகளில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் சிவராமேகவுடாவை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்தார்.
ஹலகூர்,
மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹலகூர், மலவள்ளி பகுதிகளில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் சிவராமேகவுடாவை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்தார்.
குமாரசாமி பிரசாரம்
கர்நாடகத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மண்டியா நாடாளுமன்ற தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு, காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. அதன்பேரில் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் சிவராமேகவுடா போட்டியிடுகிறார்.
இதையடுத்து அவர் மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று வேட்பாளர் சிவராமேகவுடாவை ஆதரித்து மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலவள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொண்டர்கள் பாடுபட வேண்டும்
அவர் ஹலகூர், மலவள்ளி, சென்னப்பட்டணா உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்குவேட்டை நடத்தினார். முன்னதாக அவருக்கு சென்னப்பட்டணா டவுனில் வைத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி பெங்களூருவில் இருந்து காரில் வந்த முதல்-மந்திரி குமாரசாமி மீது மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், சால்வைகள் வழங்கியும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, “கடந்த சட்டமன்ற தேர்தலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். ஒரு வெற்றி கிடைத்துவிட்டது என்று தொண்டர்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. வருகிற நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் நமது கட்சியின் வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.
நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்
இதையடுத்து மலவள்ளியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
நான் எப்போதோ இறந்திருப்பேன். குறிப்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு சென்றபோது இறந்திருப்பேன். ஆனால் எப்படியோ பிழைத்து வந்துவிட்டேன். இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் அது உங்களால்(மக்களால்) தான். நான் உயிரோடு இருப்பதும் உங்களுக்காகத்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை.
மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என் மீது நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையை நான் என்றென்றும் காப்பாற்றுவேன். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். என் கரத்தை வலுப்படுத்த வருகிற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சிவராமேகவுடாவை வெற்றிபெற வைக்க வேண்டும். அது உங்களின் கையில்தான் உள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.
Related Tags :
Next Story