கவர்னர் தலைமையில் பட்டமளிப்பு விழா: உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் அன்பழகன் பேச்சு
‘தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது’ என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கவர்னர் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
வேலூர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் முருகன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, 106 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், 34 இளங்கலை மற்றும் 20 முதுகலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் பட்டங்களை வழங்கினார். மேலும் 39 ஆயிரத்து 211 நேரில் அனுமதிக்கப்படாத பட்டய படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள், 2 ஆயிரத்து 472 கல்லூரிகள் உள்ளன. உயர் கல்வியில் எப்போதும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மாணவர்களின் நலன் கருதி 76 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. 1,585 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதம் கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் கூடுதலாகவும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாகவும் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை பொறுத்த வரை இந்திய சராசரி (ஜி.இ.ஆர்.) 25.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதை வருகிற 2020-ம் ஆண்டில் மத்திய அரசு 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு அதையும் தாண்டி ஏன் உலக சராசரியான 36 சதவீதத்தையும் தாண்டி, வளரும் நாடுகளுக்கு மேலாக இப்போதே 2017-2018-ம் ஆண்டில் 48.6 சதவீதம் பெற்று முன்னணியில் உள்ளது. தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்த பல்கலைக்கழகத்தை பொறுத்தமட்டில் 7 முக்கியத்துறைகளை உள்ளடக்கி மிக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 2018-19-ம் ஆண்டில் ரூ.11 கோடியே 70 லட்சத்து 86 ஆயிரம் நிதி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள் எதைச்செய்தாலும் முழுமையாக செய்ய வேண்டும். முழுமனதோடு செய்ய வேண்டும்
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கல்லூரிகளில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு போன்ற தவறுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். கல்லூரிகளில் உள்ள 2,334 காலி இடங்கள் விரைவில் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும்’ என்றார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி அரசின் மனித உரிமைக்குழு தலைவருமான மு.ஜெயசந்திரன் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இதில் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.காந்தி மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story