தஞ்சையில் 3 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தஞ்சையில் 3 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 3 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்
போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனசை முறையாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ரூ.7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம், கல்வி முன்பணத்தை உடனே வழங்க வேண்டும்.

அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது. பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் 3 இடங்களில் இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதன்படி தஞ்சை அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. துணைத்தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணை செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. பொருளாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மத்திய சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் அன்புமணி, அம்பேத்கர் சங்க செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை ஜெபமலைபுரத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், தொ.மு.ச. துணை பொது செயலாளர் அன்பரசன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மோகன்ராஜ், த.மா.கா. தொழிற்சங்க பொது செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 இடங்களில் நடந்த போராட்டத்தில் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி, மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாநில செயலாளர் சந்திரகுமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், வங்கி ஊழியர் சங்க தலைவர் அன்பழகன், ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Next Story