கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ஓரிருநாளில் வழங்கப்படும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு


கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ஓரிருநாளில் வழங்கப்படும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ஓரிருநாளில் வழங்கப்படும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை அறிவித்தார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், காவிரி கோட்ட செயற்பொறியாளர் முகமதுஇக்பால், குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனிசவுந்தர்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரத்து 10 எக்டேர் பரப்பில் சம்பாவும், 16 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் இதுவரை 19 ஆயிரத்து 392 விவசாயிகளுக்கு ரூ.123 கோடியே 96 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மண்டலத்தில் நடப்பு காரீப் பருவத்தில் 174 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 45 ஆயிரத்து 75 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 45 லட்சம் சாக்குகள் தலைமை அலுவலகத்தில் மண்டல கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து இது வரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 650 சாக்குகள் பெறப்பட்டுள்ளன. தற்போது வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 51 சாக்குகள் கையிருப்பு உள்ளன.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஓரிருநாளில் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதனை கண்காணிக்க உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கரும்பு விவசாயிகள் முறையான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும். கடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 124 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 92 மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. 32 மனுக்களுக்கு ஓரிரு வாரத்துக்குள் பதில் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story